Sunday, February 11, 2007

யாழ் திறந்தவெளி அரங்கில் ஜேசுதாஸ் - சுஜாதா

யாழ்ப்பாணம் திறந்தவெளி அரங்கில் சுஜாதா

"Arun: Dear Sujatha, I have seen your programme with kj jesudas in 1980 at Jaffna sri lanka, still do you remember that?

Sujatha: Arun, of course I do. that was one of my best shows. it was immediately after my engagement. the audience was really splendid."


மேலே இருப்பது Chennaionline.com அண்மையில் பாடகி சுஜாதாவுடன் நடத்திய நேர்முகப்பேட்டியில் ஒரு நேயர் கேட்டதும் சுஜாதா கூறிய பதிலும்.

1980ல் யாழ்ப்பாணம் திறந்தவெளி அரங்கில் நடந்த ஜேசுதாஸ்-சுஜாதா ஆகியோரின் திரை இசை நிகழ்ச்சியையும், இரண்டாம் நாள் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற ஜேசுதாஸ் அவர்களின் கர்நாடக சங்கீத கச்சேரியையும் நான் ஒழுங்கு செய்து நடத்தும் வாய்ப்பு கிடைத்த அனுபவத்தை சொல்கிறேன்.

இலங்கை வானொலியில் மலையாள அறிவிப்பாளராக இருந்த என் நண்பர் கருணாகரன், தான் ஜேசுதாஸை இலங்கைக்கு நிகழ்ச்சி செய்ய அழைக்க போவதாகவும், யாழ்ப்பாணத்தில் நிகழ்ச்சிகளை நடத்தி தரும்படியும் கேட்டுக்கொண்டார். இரண்டு நாள் நிகழ்ச்சிகளாக - திரை இசை, கர்நாடக இசை என்று நடத்த முடிவு எடுத்தோம். நான் அதற்கான ஏற்பாடுகளை செய்தேன்.

கொழும்பில் கருணாகரன் கர்நாடக சங்கீத கச்சேரியை மாத்திரம் நடத்தினார். போதிய கூட்டம் வரவில்லை. கடைசி நேரத்தில் பார்வையாளர்களை இலவசமாக அனுமதித்தது வினையாகப் போய்விட்டது. புதிதாக வந்தவர்கள் சினிமா பாடல்களை பாடும்படி
கேட்டு கலாட்டா பண்ணிவிட்டார்கள்.

இதற்கு எதிர்மாறாக யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்களும் நிகழ்ச்சிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றன. திரை இசை நிகழ்ச்சிக்கு திறந்தவெளியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கே.எஸ்.ராஜாவும், பி.எச்.அப்துல் ஹமீட்டும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.

ஜேசுதாஸ் தனது முதலாவது பாடலாக " சந்தனமும் ஜவ்வாதும் சேர்ந்து மணம் கமழ" என்று ஆரம்பித்தார். அந்த இனிமையான பாடல்வரிகள் அருகிலுள்ள குளத்தின் மேலாக பரவிப்படர்ந்து, தள்ளியுள்ள யாழ்.பஸ்தரிப்பு நிலையம் வரை சென்று கட்டிடங்களில் பட்டு எதிரொலித்து மீண்டும் திறந்தவெளி அரங்கில் இருந்த எங்கள் காதுகளில் பட்ட அனுபவத்தை இந்த பாடல் மூலம் நீங்களும் பெறுவீர்கள்.

"சந்தனமும் ஜவ்வாதும் சேர்ந்து மணம் கமழ.." கேட்டுப்பாருங்கள்.
Santhanamum - K.J...


ஜேசுதாஸ் தொடர்ந்து தமிழ், ஹிந்தி, மலையாளம் என்று ஏராளமான பாடல்களை தனியாகவும், சுஜாதாவுடன் இணைந்தும் பாடினார். புகழ் பெற்ற "செம்மீன்" பாடலோடு, ஒரு மலையாள தாலாட்டு பாடலையும் பாடினார். அந்த நேரத்தில், தனது தாயுடன் மேடையின் ஒரு பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவரது சிறிய மகன் ( விஜய் ஜேசுதாஸ் ?) தகப்ப்னிடம் ஓடி வந்து கால்களைப் பற்றிக்கொள்ள, ஜேசுதாஸ் மகனை அணைத்துக் கொண்டே, தாலாட்டை பாடி முடித்தார். இரவு வெகு நேரம் வரை நிகழ்ச்சி நடந்தது. பார்வையாளர்களுக்கு பூரண திருப்தி. தேன் குடித்த மாதிரித்தான்..

ஜேசுதாஸ், சுஜாதாவின் இந்த நிகழ்ச்சி பாடல்கள் சிலவற்றை - கே.எஸ்.ராஜாவின் அட்டகாச அறிவிப்புடன் கேட்டுப்பாருங்கள்..

அடுத்த நாள். வீரசிங்கம் மண்டபத்தில் கர்நாடக கச்சேரி. சங்கீத வித்வான்கள், பிரபல நாதஸ்வர, தவில் கலைஞர்கள், சங்கீத ஆர்வலர்கள் என்று நல்ல ரசனை மிக்க கூட்டம். ஜேசுதாஸ் மிகுந்த உற்சாகத்துடன், அனுபவித்து பாடினார். சபையோரும் கரகோஷம் எழுப்பி ரசித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று மின்சாரம் நின்று விட்டது. அத்தோடு ஒலியமைப்பும் இல்லாமல் போய்விட்டது. மேடையில் இரண்டு குத்துவிளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அந்த ஒளியில் 'மைக்' இல்லாமலே, ஜேசுதாஸ் கண்களை மூடி, தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தார். நான் அருகில் இருக்கும் தபால் கந்தோருக்கு ஓட்டமும், ந்டையுமாகப்போய்
மின்சார நிலையத்தாரோடு தொடர்பு கொண்டு, நிலைமையைச் சொல்லி திரும்பி வரும்போதும், இருள் சூழ்ந்த மண்டபத்துள் ஜேசுதாஸ் பாடுவதை நிறுத்தவில்லை. கரகோஷமும் கேட்டுக் கொண்டேயிருந்தது. மறக்க முடியாத கச்சேரி.

No comments:

Post a Comment