Sunday, July 1, 2007

ஒரு பாடகனும் ஒரு நாடகனும்

கனடாவில் கோடை வந்துவிட்டால் கூடவே அடுக்கடுக்காக கொண்டாட்டங்கள், விழாக்கள் என்று வந்துவிடும். அதுவும் ஒரேநாளில் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் வந்துவிட்டால் சிரமந்தான். ஏதாவது ஒன்றைத் தியாகஞ்செய்து விடவேண்டியதுதான்.

கடந்த ஜுன் 3ந்திகதி, ஞாயிற்றுக்கிழமை இப்படி ஒரு சிரமம் என்னை எதிர்நோக்கியது. இசையரங்கம் நடாத்தும் இசைக்கு ஏது எல்லையில் ஜேர்மன் கண்ணன் பாடுகிறார். அங்கிருந்து பல மைல் தூரத்தில் டொரன்ரொ பல்கலைக்கழகத்தில் இலக்கியத் தோட்டத்தினரின் 2006ம் ஆண்டுக்கான இயல் வாழ்நாள் விருதை பிரபல நாடகர் ஏ. தாசிசியஸ் பெறுகிறார்.

30 வருடங்கள் பின் நோக்கிய என் இலங்கை வாழ்க்கைக் காலத்திலே இவர்கள் இருவரையும் இருவேறு தளங்களில் அரங்கு ஆற்றுக்கலைஞர்களாக பார்த்து ரசித்தவன். நேரடி அறிமுகமும் இருந்தது. எனவே இரண்டு நிகழ்ச்சிகளிலும் நேரத்தைப் பங்கிட்டு கலந்து கொள்ளத்தீர்மானித்தேன். கண்ணனின் பாடல்களில் குறைந்தது இரண்டையாவது கேட்டு விட்டு இலக்கியத்தோட்ட விருதுவிழாவிற்கு போவதென என் அன்பரும், "பார்த்தசாரதி" யுமான திலீப்குமாருடன் ஒப்பந்தம் செய்துகொண்டேன்.


கண்ணன் ஜேர்மனிக்கு புலம் பெயரமுன்னர் யாழ்ப்பாணத்தில் இசைக்குழுக்களில் ஒரு பாட்கனாக இருந்தகாலத்தில் கர்நாடக சாயல் கொண்ட திரை இசைப்பாடல்களை பாடுவதில் வல்லவராக இருந்ததினால் எனக்கு அவர்மேல் ஒரு தனி அபிமானம் இருந்தது. மேடை நிகழ்ச்சிகள் செய்த அந்தக்காலத்தில் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். அப்படி சந்திக்கும் வேளைகளில் என் "நேயர் விருப்பமாக" அவரிடம் "சங்கராபரணம்" படப்பாடலான "சங்கரா" என்ற எஸ்பிபி யின் பாடலைப் பாடச்சொல்லி, மறக்காமல் கேட்பேன். அவரும் அவ்வாறு பலதடவைகள் மேடையில் பாடியிருக்கிறார். காலப்போக்கில் அவர் ஜேர்மனிக்கு சென்று விட்டபின் தொடர்பு அறுந்துவிட்டபோதிலும், அவ்வப்போது நினத்துக்கொள்வேன்.

கண்ணன் பாடிய பாடல்களில் நான்கினை மட்டும் கேட்டுவிட்டு விருதுவிழா நோக்கிய என்பயணத்தைத் தொடர்ந்தேன். அவற்றுள் கவிஞர் செழியனின் "துப்பிவிட்டுப் போனது காற்று" என் மனதில் பதிந்து போய் ஒரு சுகானுபவத்தை தந்தது. மிகுதிப் பாடல்களையும் கேட்டிருந்தால் என் தேர்வுவரிசை வேறாகவும் இருந்திருக்கும். ஆனால் இந்தப்பாடல் எப்படியோ அதில் இருக்கும் என்பது மட்டும் உண்மை.


நாடகர் ஏ. தாசிசியஸ் அவர்களை முதன்முதலாக கொழும்பு லும்பினி தியேட்டரில் அரங்கேறிய மகாகவியின் "கோடை" நாடகத்தின் இயக்குனராக அறிந்து கொண்டேன். ஒரு கவிதை நாடகம் என்று சொல்லே ஏதோ அந்நியமானதாக நான் கருதிய அந்த வேளையில் "கோடை" நாடகத்தின் பேச்சோசை வசனங்களும், நடிகர்களின் இயல்பான இயங்குதன்மையும் எனக்கு வியப்பை அளித்தன. மேடை நாடகங்கள் பற்றிய வேறொரு படிமத்தை கொண்டிருந்த எனக்கு, முற்றுமுழுதாக இதை அங்கீகரிக்க மனம் இடம் கொடுக்காவிடினும், இவர்கள் ஏதோ புதிதாக செய்யத் தலைப்ப்ட்டிருக்கிறார்கள் என்று புரிந்தது.

கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கிய நாடகக்காரர்களிடையே தாசிசியஸின் இந்த முயற்சி எள்ளி நகையாடப்பட்டது எனக்குத் தெரியும். ஆனால் புது வரவுகளை ஏதோ வகையில் விரும்புகிறவன் ஆதலால் என்பாட்டில் "கோடை" பார்க்கப் போயிருந்தேன். அதில் பெரிய நாயனக்காரராக நடித்த திருமலையைச் சேர்ந்த சச்சிதானந்தன் (பின்னாளில் பிரசித்திபெற்ற ஒரு சட்டத்தரணி), பொலிஸ் சின்னப்புவாக நடித்தவர் ( மறைமுதல்வன் அல்லது சிங்காரவேல்), நாயனக்காரர் மனவி, கமலி, ஐயர் ஆகிய பாத்திரங்கள் என் ஞாபகத்தில் பதிந்தன. அவர்கள் நடிப்பில் இயல்புத் தன்மை தெரிந்தது.

"கோடை"யைத் தொடர்ந்து, பொறளை வை.எம்.பி.ஏ அரங்கில் தாசிசியஸின் இயக்கத்தில் மகாகவியின் "புதியதொரு வீடு" பார்க்கப் போயிருந்தேன். கடலில் காணாமல் போய் பின்னர் திரும்பிவரும் அண்ணனாக சச்சிதானந்தனும், அண்ணன் மனவியை சந்தர்ப்பவசத்தால் திருமணம் செய்துகொள்ளும் தம்பியாக விமல் சொக்கநாதனும் நடித்தார்கள். அக்காலச் சமூகச் சூழலில், இத்தகைய நிகழ்வை சொல்லப் புறப்படுவதே தவறானது, பண்புப் பிறழ்வானதென பொய்மையான முகமூடியைப்போட்டுக்கொண்டு இயங்கியவர்கள் மத்தியிலே இதைச்சொல்லப் புறப்பட்ட மகாகவியும், அரங்கிற்கு ஆக்கிய தாசிசியஸும் எனக்கு புரட்சிக்காரார்களாகத் தெரிந்தார்கள்.

நாடகத்தின் குழுப்பாடகர்களின் பின்னணிப்பாடல்களும், மேடையில் எளிமையான முறையில் கொண்டுவரப்பட்ட காட்சிகளும், நடிகர்களின் திட்டவட்டமான அசைவுகளும், தெளிவான வசன வெளிப்பாடும் அவர்கள் எத்தகைய பயிற்சிகளை பெற்றிருப்பார்கள் என்பதையும், நாடகர் தாசிசியஸின் கடும் உழைப்பு அதன் பின்னணியில் இருந்திருக்கிறது என்பதையும் எனக்கு உணர்த்தியது.
.
இதற்குப் பிறகு ஒரு நிகழ்வில் தாசிசியஸின் மன உறுதியை பார்க்கும் ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகையின் 10வது ஆண்டு விழா கொழும்பில் சரஸ்வதி மண்டபத்தில் நடந்தது. அதில் இடம்பெறவிருந்த நிகழ்ச்சிகளில் "கோடை" நாடகமும் ஒன்று. "கோடை" நாடகத்தில் கோயில் ஐயர், நாயனக்காரர் வீட்டில் தேனீர் அருந்துவதாக ஒரு காட்சி வரும். நாடகம் தொடங்குவதற்கு சற்று முன்னதாக விழா நிர்வாகிகள் அந்த காட்சியை நீக்கிவிடச்சொல்லி தாசிசியஸிடம் சொன்னார்கள். அவர் முடியாதென்று சொன்னதோடு, அதுவே நிபந்தனை என்றால் நாடகம் மேடையேற்ற முடியாது என்று கலைஞர்களை அழைத்துக்கொண்டு சென்று விட்டார். அங்கு இருந்த நான் உள்ளிட்ட பலர் இதை வியப்புடன் பார்த்துக் கொண்டு நின்றோம். பலவகையிலும் பத்திரிகைக்காரர்கள் முன்னிலைப் படுத்தப்பட்ட காலம் இது என்பதை நினைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் தாசிசியஸ் யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியில் ஆசிரியராகப் பணியேற்றதோடு அவரது நாடகத் தொழிற்பாடுகளும் வடக்கிற்கு இடம் பெயர்ந்ததும், அங்கு நிறுவப்பட்ட நாடக அரங்கக் கல்லூரியின் செயற்பாடுகளில் இவர் மும்முரமாக ஈடுபட்டதும், இவரோடு குழந்தை சண்முகலிங்கம், ஏ. ரி. பொன்னுத்துரை போன்றோர் இயங்கியதும் நான் அவ்வப்போது அறிந்த செய்திகள்.

ஆனால் புலம் பெயர்ந்தபின்னர், பிபிசியின் த்மிழ்ச்சேவையில் அவரது பணி பற்றிய விரிவான விளக்கங்கள், நாடகம் தொடர்பான தேடல்களில் அவர் இந்தியாவில் பல மாதங்கள் தங்கியிருந்தது, நாடகப்பட்டறைகளை அங்கும், பின்னர் புலம் பெயர்ந்த சிறுபான்மை இனங்களான குர்திஷ், சோமாலிய மக்கள் மத்தியிலும் நடத்தியது, சுவிஸ் நாட்டின் நாடக முயற்சிகளில் ஈடுபட்டதோடு அந்த நாட்டின் கலை சார்ந்த ஆலோசகராக செயற்பட்டது போன்ற விபரங்களை எல்லாம் இந்த் விருது வைபவத்தில் தாசிசியஸ் பற்றிய அறிமுகவுரை நிகழ்த்திய ஸ்ரீஸ்கந்தனின் உரையிலிருந்துதான் அறிந்து கொண்டேன்.

ஒரு சிறு மனத்தாங்கல். ஆரம்பத்தில் இந்த விருதுவிழா வெகு சாவதானமாகவே நடந்தது. தனித்தனி இலக்கிய விருதுகளைப் பெற்றவர்கள் தொடர்பான அறிமுகஉரைகளும் சற்று விஸ்தாரமாகவே அமைந்தன. சம்பிரதாயபூர்வமான நன்றி செலுத்தல்களுக்கும் குறைவிருக்கவில்லை. ஆனால் இவற்றின் பின்விளைவாக இயல்விருது பெற்ற நாடகர் ஏ. தாசிசியஸ் தான் வழங்கவிருந்த ஏற்புரையின் சீர் கெடுமளவிற்கு தன் குறிப்புகளிலிருந்து அவசரம் அவசரமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக தேர்ந்தெடுத்து வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டார்.

இருப்பினும் "புதியதோர் வீடு" நாடகத்திற்காக அவர் மன்னாரில் கடலோடிகளுடன் தங்கியிருந்து அவதானங்கள் செய்தது, சுபசிங்க என்ற சிங்கள வைத்தியர் போன்றோரிடம் தான் கற்றுக்கொண்ட சித்த மருத்துவம் சார்ந்த சித்திகள், அவற்றை தன்னோடு இயங்கியவர்களோடு பங்கிட்டுக்கொண்டது போன்ற விபரங்களை தொடர்பு அறுந்த இழைகளாகப் பெற்றுக்கொள்ளத்தான் செய்தோம். நாடகராக செயற்படும்போது தன் நாடகப்பிரதிகளில் மழித்தல், நீட்டலுக்கு இடம் கொடாத அவருக்கு இது நேர்ந்தது துர்ப்பாக்கியந்தான்.

நன்றி உரைகூற வந்தவர் மிகச்சாதாரணமான சில தமிழ்ப்பெயர்களுடனேயே அல்லாடிக்கொண்டிருக்கும்போது எனக்கு முன் வரிசையில் இருந்தவர் திரும்பிச் சொன்னார்.

" மேடையில் சொல்லப்படும் வசனங்கள் தெளிவாகச் சொல்லப்படவேண்டும் என்பதையே நியதியாகக் கொண்டு கடும்பயிற்சி கொடுக்கும் ஒரு நாடகக்காரரின் விருது விழாவில் இவ்வாறு முன்னர் வாசித்துப் பார்க்காமல்.."

மிகுதியை அவர் சொல்லவில்லை.

Friday, June 1, 2007

சந்தோஷ் சுப்பிரமணியம்ரத்தம் இன்றி கத்தி இன்றி சுதந்திரம் பெற்றலும் பெறலாம். ஆனால் இவையில்லாமல் அண்மைக்காலத்தில் தமிழ்ப்படமே வராது..வரவே வராது என்று நினைத்துக்கொண்டிருக்க - வந்திருக்கிறது - சந்தோஷ் சுப்பிரமணியம்.

பெரிய சண்டை இல்லை..குத்தாட்டம் இல்லை.. ஆபாசக் காட்சிகள் இல்லாமல் படம் செய்யலாம் என்று நிரூபித்திருக்கிறார். இயக்குனர் ராஜா.

ஒரு இனிமையான காதல் கதை. காதல் கதை என்பதைவிட தகப்பன் - மகன் உறவை அதன் சிக்கலை சொல்லும் ஒரு அருமையான கதை.

படத்தின் தலைப்பே கதையை shuttle ஆக சொல்லிவிடுகிறது.

சந்தோஷ் (ஜெயம் ரவி) தன் நண்பர்களுடன் சந்தோசமாக பொழுதுபோக்கும் ஒரு இளைஞன். தன் மகன் உட்பட தன் குடும்பத்தார் எல்லோருக்குமே எது நல்லது என்று பார்த்து பார்த்து செய்யும் அப்பா சுப்பிரமணியம்(பிரகாஷ்ராஜ்). மகன் அணியவேண்டிய உடையிலிருந்து எல்லாவற்றையும் அவரே முடிவு செய்யும்போது அதுவே மகனுக்கு முள்கிரீடமாகி விடுகிறது. தான் பார்க்கப்போகும் வேலை, தான் திருமணம் செய்யப்போகும் பெண் ஆகிய இரண்டு விஷயங்களில் அப்பாவின் முடிவுக்கு விட்டுக்கொடுக்கமாட்டேன் என்று நண்பர்களிடம் உறுதி கூருகிறான் சந்தோஷ்.

ஆனால் அதற்கும் இடம் கொடாமல் அப்பா அவனுக்கு தான் தீர்மானித்த பெண்ணையே திருமண ஒப்பந்தம் செய்து வைப்பதோடு தனது கொம்பனியிலேயே வேலைபார்க்கச் சொல்கிறார். சந்தோஷ் குழம்பிப்போய் விடுகிறான்.

இந்த நேரத்தில்தான் சந்தோஷ், ஒரு பெண்ணை(ஜெனெலியா) சந்திக்கிறான். அவனது கல்லூரியிலேயே படிக்கும் ஒரு அப்பாவியான பெண். கோயிலில் கணக்கெழுதும் ஒரு குடிகாரத்த்ந்தை (சாயஜி ஷிண்டே) யின் ஒரேயொரு மகள். அவளது அப்பாவித்தனமே, அதுவரை பெண்களை விரும்பியிராத சந்தோஷை கவர்கிறது. அவளை விரும்பத்தொடங்குகிறான்.

அப்பாவுக்கு இது தெரியவர, "அந்த பெண்ணை எங்கள் வீட்டுக்கு அழைத்து வா.. எல்லாருக்கும் பிடிக்கும்படி அவள் நடந்துகொண்டால் பார்க்கலாம்" என்கிறார் அப்பா.

அப்படி வந்தவள் தன் அப்பாவித்தனத்தினால் சந்தோஷிடம் அடிக்கடி ஏச்சும், பேச்சும் வாங்கி, இறுதியில் அவன் தன்னை இப்போது விரும்பவில்லையென்று சொல்லி தன் வீட்டுக்கு திரும்புகிறாள்.

சந்தோஷ் வீட்டில் அப்பா, அம்மா, மகன் மூவருக்கும் நடக்கும் வாதங்களின் முடிவில் அப்பா தன்னை மாற்றிக்கொள்கிறார்.

பிரகாஷ்ராஜ் தன் பாத்திரத்தை மிக யதார்த்தமாக செய்கிறார். அது மிகச் சிறப்பு. ஜெயம் ரவியும் இந்தப்படத்தில் தன் நடிப்புத் திறமையை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படியும் ஒரு பெண் இக்காலத்தில் இவ்வளவு அப்பாவியாக இருப்பாளா என்று எங்கள் புத்தி அடிக்கடி தட்டிக் கேட்டுக்கொண்டிருந்தாலும், அந்த நடிப்பில் எல்லாவற்றையும் மறந்து போய் விடுகிறோம். அது ஒரு தனி ரகம். ஜெனேலியா ஏகிளாஸ் ரகம். பஞ்சுமிட்டாய் சாப்பிட்டது போலிருக்கிறது.

தேவி ஸ்ரீபிரசாத்தின் பாட்ல்கள் இனிப்பு ரகம்.

சபாஷ் ராஜா- ஜெயம்ரவி சகோதர்களே.. ...!

Sunday, February 11, 2007

யாழ் திறந்தவெளி அரங்கில் ஜேசுதாஸ் - சுஜாதா

யாழ்ப்பாணம் திறந்தவெளி அரங்கில் சுஜாதா

"Arun: Dear Sujatha, I have seen your programme with kj jesudas in 1980 at Jaffna sri lanka, still do you remember that?

Sujatha: Arun, of course I do. that was one of my best shows. it was immediately after my engagement. the audience was really splendid."


மேலே இருப்பது Chennaionline.com அண்மையில் பாடகி சுஜாதாவுடன் நடத்திய நேர்முகப்பேட்டியில் ஒரு நேயர் கேட்டதும் சுஜாதா கூறிய பதிலும்.

1980ல் யாழ்ப்பாணம் திறந்தவெளி அரங்கில் நடந்த ஜேசுதாஸ்-சுஜாதா ஆகியோரின் திரை இசை நிகழ்ச்சியையும், இரண்டாம் நாள் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற ஜேசுதாஸ் அவர்களின் கர்நாடக சங்கீத கச்சேரியையும் நான் ஒழுங்கு செய்து நடத்தும் வாய்ப்பு கிடைத்த அனுபவத்தை சொல்கிறேன்.

இலங்கை வானொலியில் மலையாள அறிவிப்பாளராக இருந்த என் நண்பர் கருணாகரன், தான் ஜேசுதாஸை இலங்கைக்கு நிகழ்ச்சி செய்ய அழைக்க போவதாகவும், யாழ்ப்பாணத்தில் நிகழ்ச்சிகளை நடத்தி தரும்படியும் கேட்டுக்கொண்டார். இரண்டு நாள் நிகழ்ச்சிகளாக - திரை இசை, கர்நாடக இசை என்று நடத்த முடிவு எடுத்தோம். நான் அதற்கான ஏற்பாடுகளை செய்தேன்.

கொழும்பில் கருணாகரன் கர்நாடக சங்கீத கச்சேரியை மாத்திரம் நடத்தினார். போதிய கூட்டம் வரவில்லை. கடைசி நேரத்தில் பார்வையாளர்களை இலவசமாக அனுமதித்தது வினையாகப் போய்விட்டது. புதிதாக வந்தவர்கள் சினிமா பாடல்களை பாடும்படி
கேட்டு கலாட்டா பண்ணிவிட்டார்கள்.

இதற்கு எதிர்மாறாக யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்களும் நிகழ்ச்சிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றன. திரை இசை நிகழ்ச்சிக்கு திறந்தவெளியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கே.எஸ்.ராஜாவும், பி.எச்.அப்துல் ஹமீட்டும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.

ஜேசுதாஸ் தனது முதலாவது பாடலாக " சந்தனமும் ஜவ்வாதும் சேர்ந்து மணம் கமழ" என்று ஆரம்பித்தார். அந்த இனிமையான பாடல்வரிகள் அருகிலுள்ள குளத்தின் மேலாக பரவிப்படர்ந்து, தள்ளியுள்ள யாழ்.பஸ்தரிப்பு நிலையம் வரை சென்று கட்டிடங்களில் பட்டு எதிரொலித்து மீண்டும் திறந்தவெளி அரங்கில் இருந்த எங்கள் காதுகளில் பட்ட அனுபவத்தை இந்த பாடல் மூலம் நீங்களும் பெறுவீர்கள்.

"சந்தனமும் ஜவ்வாதும் சேர்ந்து மணம் கமழ.." கேட்டுப்பாருங்கள்.
Santhanamum - K.J...


ஜேசுதாஸ் தொடர்ந்து தமிழ், ஹிந்தி, மலையாளம் என்று ஏராளமான பாடல்களை தனியாகவும், சுஜாதாவுடன் இணைந்தும் பாடினார். புகழ் பெற்ற "செம்மீன்" பாடலோடு, ஒரு மலையாள தாலாட்டு பாடலையும் பாடினார். அந்த நேரத்தில், தனது தாயுடன் மேடையின் ஒரு பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவரது சிறிய மகன் ( விஜய் ஜேசுதாஸ் ?) தகப்ப்னிடம் ஓடி வந்து கால்களைப் பற்றிக்கொள்ள, ஜேசுதாஸ் மகனை அணைத்துக் கொண்டே, தாலாட்டை பாடி முடித்தார். இரவு வெகு நேரம் வரை நிகழ்ச்சி நடந்தது. பார்வையாளர்களுக்கு பூரண திருப்தி. தேன் குடித்த மாதிரித்தான்..

ஜேசுதாஸ், சுஜாதாவின் இந்த நிகழ்ச்சி பாடல்கள் சிலவற்றை - கே.எஸ்.ராஜாவின் அட்டகாச அறிவிப்புடன் கேட்டுப்பாருங்கள்..

அடுத்த நாள். வீரசிங்கம் மண்டபத்தில் கர்நாடக கச்சேரி. சங்கீத வித்வான்கள், பிரபல நாதஸ்வர, தவில் கலைஞர்கள், சங்கீத ஆர்வலர்கள் என்று நல்ல ரசனை மிக்க கூட்டம். ஜேசுதாஸ் மிகுந்த உற்சாகத்துடன், அனுபவித்து பாடினார். சபையோரும் கரகோஷம் எழுப்பி ரசித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று மின்சாரம் நின்று விட்டது. அத்தோடு ஒலியமைப்பும் இல்லாமல் போய்விட்டது. மேடையில் இரண்டு குத்துவிளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அந்த ஒளியில் 'மைக்' இல்லாமலே, ஜேசுதாஸ் கண்களை மூடி, தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தார். நான் அருகில் இருக்கும் தபால் கந்தோருக்கு ஓட்டமும், ந்டையுமாகப்போய்
மின்சார நிலையத்தாரோடு தொடர்பு கொண்டு, நிலைமையைச் சொல்லி திரும்பி வரும்போதும், இருள் சூழ்ந்த மண்டபத்துள் ஜேசுதாஸ் பாடுவதை நிறுத்தவில்லை. கரகோஷமும் கேட்டுக் கொண்டேயிருந்தது. மறக்க முடியாத கச்சேரி.

Friday, April 1, 2005

பப்லோ நெருடாவாக நான்..


ப்ல ஆண்டுகளுக்கு முன்னர் "மல்லிகை" போன்ற சஞ்சிகைகளில் பப்லோ நெருடா என்ற ஸ்பானியக் கவிஞரின் கவிதைகளின் மொழிபெயர்ப்புகளை வாசித்த ஞாபகம் இருக்கிறது.

திடீரென்று அந்த சிறந்த கவிஞர் எனக்கு மிகவும் பரிச்சயமானவராகப் போனார்.

கனடாவில் பல ஆண்டுகளாக வருடாந்தம் நாடக, நடன விழாவொன்றை "அரங்காடல்" என்ற பெயரில் "மனவெளி" அமைப்பு நடத்தி வருகின்றது. இந்த அமைப்பின் 12வது அரங்காடல் 2005 மார்ச் மாதத்தின் 13ந்திகதியன்று அரங்கேறியது.இந்த அரங்காடலில் இடம் பெற்ற நான்கு நாடகங்களில் "வதை" என்ற நாடகத்தில், "பப்லோ நெருடா" வாக நான் நடிக்க நேர்ந்ததுதான் அந்த கவிஞரைப்பற்றிய என் தேடலுக்கு காரணமாக அமைந்தது.

வாழ்ந்து, மறைந்த ஒரு பிரபலமான கவிஞராக நான் நடிக்க முற்பட்டபொழுது அவரைப் பற்றி நிறையவே அறிய முற்பட்டேன். வலைத்தள்ங்களில் தேடித்தேடி அவரது வாழ்க்கை வரலாற்றை, அவரது கவிதைகளின் மொழிபெர்ப்புகளை, இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பொழுது அவர் ஆற்றிய உரை என்பனவற்றை வாசித்தேன்.

அவர் வாழ்ந்த சிலி நாட்டின் அக்கால அரசியல் நிலை பற்றி, ஆட்சியாளர்கள் பற்றி, ஆட்சி மாற்றம் நெருடாவிற்கு ஏற்படுத்திய பாதிப்பு, அவரது இலக்கிய நண்பர்கள் பற்றி அறிந்துகொள்ள முனைந்தேன். கடற்கரையோரமாக அமைந்திருந்த அவரது வீட்டின் அமைப்பு எவ்வாறு இருந்தது, அவருக்கு பிடித்தமான பொருட்கள் என்ன என்றெல்லாம் ஆய்வு செய்தேன். பாய்மரக் கப்பல்களின் நுனியில் இருக்கும் செதுக்கிய உருவங்களை சேகரிப்பதில் அவர் அக்கறை காட்டினார் என்பதை அறிந்துகொண்ட நான் அத்தகைய சிலவற்றை தேடி அலைந்தேன்.

ஒரு சிறிய நாடகத்தில் நடிப்பதற்கு இத்தனை முன்னேற்பாடா என்று நீங்கள் வியக்கலாம். ஆனால் அப்போது எனக்கு அவசியமானதாகத் தெரிந்தது. அத்தோடு மேடையேற்றத்தின்போது இந்த தேடல்களின் பலன் எனக்கு தெரிந்தது.Mario Fratti என்ற அமெரிக்க நாடகாசிரியர், பப்லோநெருடாவின் இறுதி நாட்கள் பற்றி எழுதிய "வதை" (Torture) என்ற நாடகத்தை இந்திய எழுத்தாளரான புவியரசு என்பவர் தமிழாக்கம் செய்திருந்தார். அதைத் தழுவிய்தாகவே எங்கள் நாடகம் அமைந்திருந்தது. என்னுடைய பல மேடை நாடகங்களில் நடித்த துஷ்யந்தன் ஞானப்பிரகாசம் இந்த பிரதியை தான் இயக்கப் போவதாக கூறி என்னை நெருடாவாக நடிக்க அழைத்த பொழுது மிகுந்த சந்தோசத்துடன் சம்மதித்தேன்.

"வதை" நாடகத்தின் கதை இதுதான்.

1973ம் ஆண்டு செப்டெம்பர் 11ந் திகதி.
சிலி நாட்டில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சல்வடோர் அலெண்டேயின் சோஷலிச அரசாங்கம் அந்த நாட்டின் ராணுவத்தினால், அமெரிக்க உளவுச் சேவையின் உதவியுடன் கவிழ்க்கப்பட்ட நாள். அகஸ்டோ பினோஷே என்பவனின் கொடுங்கோலாட்சி ஆரம்பித்த நாள்.

இந்த ராணுவப்புரட்சியையும், தொடர்ந்த அதன் ஆட்சியையும் சிலி நாட்டவர் பலர் எதிர்க்கவே செய்தார்கள். அவர்கள் தேடி அழிக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவராக பப்லோ நெருடாவும் இருந்தார். பப்லோ நெருடா நவீன யுகத்தின் உன்னதமான ஸ்பானிய கவிஞராக கருதப்படவர். நோபல் பரிசு பெற்றவர். கவிழ்க்கப்பட்ட சால்வடோர் அலெண்டேயின் நெருங்கிய நண்பர். ஒரு சோஷலிச வாதி.

1973ம் ஆண்டு செப்டெம்பர் 11ந் திகதி - சிலி நாட்டின் ஜனநாயகம் கொன்றொழிக்கப்பட்ட நாள்.

1973ம் ஆண்டு செப்டெம்பர் 23ந் திகதி - புற்று நோயினால் ஏற்கெனவே பீடிக்கப்பட்டிருந்த பப்லோ நெருடா, நிகழ்ந்த சம்பவங்களினால் மனமுடைந்து மரணமான நாள்.

முக்கியமான இந்த இரண்டு நாட்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைத்தன் இந்த நாடகம் கூறியது.


இந்த நாடகத்தில் என்னுடன் இயக்குனர் துஷ்யந்தன் ராணுவ அதிகாரியாகவும், நீரா துஷ்யந்தன் மருத்துவராகவும், மயூரன் ராணுவ சிப்பாயாகவும் நடித்தார்கள். பப்லோவின் கவிதைகளோடு பாரதியின் கவிதையொன்றினையும் நாடகத்தில் ஆங்காங்கே உபயோகித்தோம். பாரதியின் கவிதை இதில் சேர்க்கப்பட்டிருக்கக்கூடாது என்று சில விமர்சகர்கள் கூறினாலும் எங்களுக்கு அதில் தவறு இருந்ததாகத் தெரியவில்லை.

தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்
மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ


நாடகத்தின் இறுதியில் ராணுவ அதிகாரியின் அட்டகாசத்தின் பின்னே இக்கவிதை ஒலித்தது என் கவிதா நாயகரான பாரதிக்கு நான் செய்த அஞ்சலியாகவே எனக்குப் பட்டது.நாடகத்தில் என்னை (பப்லோ நெருடாவை)கடுஞ்சொற்களினால் துன்புறுத்திய ராணுவ அதிகாரி, என் நண்பனான் ஸ்பானிய கவிஞன் கார்சியா லோர்காவைபற்றி, இறந்துபோன சல்வடோர் அலெண்டே பற்றி இளக்காரமாக சொன்னபொழுது என் மனத்தின் வேதனையை பார்வையாளர்கள் உணர்ந்து கொண்டார்கள். என்னோடு அவர்களும் கலங்கிய போதுதான் நான் முன்னர் குறிபிட்ட தேடல்களின் பலன் எனக்குத் தெரிந்தது.

கனேடிய வானொலியான CBC எங்கள் நாடகம் பற்றிய ஒரு சிறுகுறிப்பை தனது " Big City, Small world" என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்புச் செய்தது. அதில் நான் கூறிய பப்லோ நெருடாவின் கவிதைகளின் தமிழ் வடிவமும் ஒலித்தது. கனடாவின் பிரதான வானொலியொன்றில் தமிழ் ஒலித்தது இதுவே முதற்தடவையாகவிருக்கும்.

நீங்களும் கேட்டுப்பாருங்கள்..

"Vathai" (Torture)...


இவையெல்லாம் சேர்ந்து இந்த நாடகத்தை என்னால் மறக்கமுடியாமல் செய்கின்றன.

Wednesday, January 5, 2005

கான இசைமணி சீர்காழி கோவிந்தராஜன்70 களில் இது நடந்தது.
கொழும்பில் செட்டித்தெருவில் உள்ள சிவசுப்ரமணியசுவாமி கோவிலில் நடந்த கச்சேரி.

மாலை நேரம். கட்டுக்கடங்காத சனக்கூட்டம்.கோவில் வாசல்வரை செல்லும் தார்றோட்டில் எங்கள் கால்செருப்புக்களை கழ்ற்றி அதையே ஆசனமாக பயன்படுத்தி அமர்ந்திருந்த கூட்டத்தில் நானும் ஒருவன். இசைமணி சீர்காழி கோவிந்தராஜனின் இசையமுதை பருகுவதற்காக காத்திருந்தோம்.

கச்சேரி நடந்த இடம் முருகன் ஆலயம் என்பதாலோ என்னவோ அவர் முருகன் புகழ் பாடும் பாடல் ஒன்றுடன் ஆரம்பித்தார்.அந்தப்பாடலின் நான்காவது வரியை அவர் பாடிக்கொண்டிருக்கும் போது, திடீரென்று தெளிவாக இருந்த வானத்தில் எங்கிருந்தோ வந்த கருமுகில்கள் சூழ்ந்து கொண்டன. வந்த வேகத்திலேயே பெருத்த மழை பெய்யத் தொடங்கியது.

கூட்டத்தினரில் பலர் எழுந்து ஒடி அருகில் உள்ள கட்டிடங்களில் ஒதுங்கினர். என்னைப் போனற சிலர் இடத்தை விட்டுப் போனால் திரும்ப அந்த இடம் கிடைக்காது என்ற எண்ணத்தில், "நாங்கள் காணாத மழையா" என்ற பாவனையில், அசையாமல் இருந்து மழையில் தெப்பமாக நனைந்து கொண்டிருந்தோம்.

பாடிக்கொண்டிருந்த இசைமணி அந்த வரியுடனேயே பாட்டை நிறுத்தி விட்டார். மன்னிப்பு கேட்பது போல அவர் பிரார்த்தனை செய்தார்.

" விநாயகப்பெருமானே.. நான் உன்னைத் துதிக்கும் பாடலுடன் ஆரம்பித்திருக்கவேண்டும். ஆனால் உன் தம்பி புகழ் கூறும் பாடலுடன் தவறுதலாக தொடங்கி விட்டேன். என்னை மன்னித்துக்கொள் அப்பனே.."

என்று சொல்லியதோடு பாடலை மாற்றி பாடத்தொடங்கினார்.

" விநாயகனே ..வினை தீர்ப்பவனே.."

நாங்கள் நிமிர்ந்து ஆகாயத்தைப் பார்த்தோம். நாங்கள் அமர்ந்திருந்த றோட்டின் இரண்டு பக்கங்களிலும் இருந்த விளக்குக் கம்பங்களின் வெளிச்சத்தில், மழை கொஞ்சம் கொஞ்சமாக குறைவது தெரிந்தது. குறைந்து மெல்லிய தூறலாக வந்து சடுதியில் மழை நின்றே விட்டது.
கரகோஷம் எழுந்தது. அவர் கச்சேரியைத் தொடர்ந்தார்.

இரவு 12 மணி வரை அவர் இசைவெள்ளத்தைப் பருகினோம். கச்சேரி முடியும் வரைக்கும் ஒரு துளி கூட மழை பெய்யவில்லை.

எல்லாம் முடிந்து, எங்கள் இடங்களுக்கு போவதற்காக, புறக்கோட்டை பஸ் நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கும் போது மீண்டும் மழை பெருத்த இரைச்சலுடன்பெய்யத் தொடங்கியது. அடுத்த நாள் காலை வரை அது பெய்தது.

இன்றுவரை அந்த நிகழ்விற்கு என்னால் விடை கண்டுபிடிக்கமுடியவில்லை.

Sunday, December 5, 2004

நமது மெல்லிசைப்பாடல்கள் பற்றிய ஒரு கட்டுரை

(நன்றி - ஞானம் சஞ்சிகை - June 2006)


ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் -ஒர் அவதானிப்பு-
-வதிரி - சி. ரவீந்திரன்


இசைத்துறையின் வரலாறு இந்தியாவி லேயே தோற்றம் காண்கிறது. அதன் ஒரு செயல் வடிவமான பரதமும் அங்குதான் பிறந்தது. இதன் வளர்ச்சியின் பின்புலமாக மற்றைய நாடு களிலும் இக்கலைகள் வளர்க்கப்பட்டன. இந்த வளர்ச்சியின் ஒரு நாடாக எமது நாடும் அங்கீகாரம் பெறுகிறது. எமது மக்களின் இசை, நடன வளர்ச்சியின் ஆர்வம் காரணமாக நம்மவர்கள் இசை, நடனம் மற்றும் இசை வாத்தியங்களை தென் இந்தியாவில் சென்று கற்று பாண்டித் தியம் பெற்றவர்களாக விளங்குகின்றனர். யாழ்ப்பாணம் கொழும்பு ஆகிய பகுதிகளில் தென்னிந்திய வித்துவான்கள் வந்து இசை வகுப்புகளை நடாத்தியுமுள்ளனர். ஒரு காலத்தில் இந்திய தவில் - நாதஸ்வரக் கலைஞர்களுக்கு இணையாக நமது கலைஞர்களும் திகழ்ந்தனர். இசையின் ஒரு பகுதியான நாட்டுக் கூத்து தமிழர்களின் பாரம்பரியக்கலையாகும். இதே போன்று காமன் கூத்து மலையகத்தின் பாரம் பரியக்கலையாக இருப்பதையும் உணரமுடிகிறது.நமது மக்களுக்கென்று பாரம்பரியக் கலைவடிவங்கள் இருந்தாலும் நம்மவர்களுக் கென்று ஒரு இசைவடிவம் இருக்கவில்லை என்பதை மறுப்பதற்கில்லை. இசைப்பேரரசு திரு சண்முகரத்தினம் அவர்களின் இசையில் பல பாடல்களை பலர் பாடியிருந்தனர். இதை இலங்கை வானொலியே ஒலிபரப்பி வந்தது. இதே போன்று வீரமணி ஐயர் அவர்கள் பாடல்களை எழுதி இசையமைத்து பாட வைத்துள்ளார். இவரது பாடல்கள் கீர்த்தனங்களாக அமைந்தன. இவரது பாடல்களை மதுரைசோமு, சீர்காழி கோவிந்தராஜன், T.M. சௌந்தரராஜன் ஆகியோரது குரல்களிலும் கேட்கின்றோம். இவைகள் கர்நாடக இசையிலமைந்த பாடல் களாகவே இருந்தன. 1969ல் காவலூர் ராஜதுரை அவர்களால் வர்த்தக சேவை நிகழ்ச்சிக்காக பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. நம்மவர் பாடலில் நம்மவர் குரல் ஒலித்ததாக திரு. விக்னேஸ்வரன் கட்டுரையொன்றில் குறிப்பிடு கின்றார். (வடமராட்சியின் இசைப் பாரம்பரியம் நூல்) இதன் பின் தமிழருக்கு தனித்துவமான இசையொன்று தேவையென பலர் ஆதங்கம் கொண்டமையால் இதனைப் பூர்த்தி செய்ய மர்ஹம் H.M.B. முகைதீன் வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.1970-71 காலப்பகுதியில் இலங்கை வானொலியில் H.M.B. பணிப்பாளர் சபையில் அங்கம் வகித்தபோது மெல்லிசைப் பாடல்கள் என்ற நிகழ்ச்சிக்கு அங்கீகாரம் வழங்கினார். அன்றைய காலத்தில் ஈழத்து ரத்தினம் எழுதிய அனேக பாடல்களே பாடப்பட்டன. ஈழத்து ரத்தினம் தென்னிந்தியாவின் தமிழ் சினி மாவுக்கும் பாடல் எழுதியதாக ஞாபகம். படத்தின் பெயர் ஞாபகத்தில் இல்லை. மெல்லிசைப் பாடகராகத் தெரிவு செய்யப்பட்ட முதல் கலைஞர் தானென பாடகர் முத்தழகு கூறுகிறார். மெல்லிசைப்பாடலின் பிதாமகனென ‘பரா’ என்றழைக்கப்பட்ட திரு. S. K. பரராஜசிங்கம் பெயர் பெறுகிறார். இலங்கை வானொலியில் அறிவிப் பாளராகக் கடமை புரிந்த பரா அவர்கள் இயற்கையான இசைஞானம் மிக்கவர். பரா பற்றிய இன்னொரு தகவலையும் சொல்லி வைக்க வேண்டும். பராவும் இவரது சகோதரர் Dr. மகேஸ்வரனும் ஒரு காலத்தில் இசைக் கச்சேரிகள் செய்தார்களென்ற தகவலை மூத்த இலக்கிய ஆர்வலரான த. இராஜகோபாலன் சொல்லக் கேள்விப்பட்டேன். பராவின் இனிமை யான குரலும் இசைஞானமும் பராவை நல்ல தொரு மெல்லிசைப்பாடகனாக்கியது.இலங்கை வானொலியின் இசைப் பகுதி யில் சேவையாற்றிய பலர் இசையமைத்து மெல்லிசைப் பாடல்கள் வெளிவந்தன. இசை யமைப்பாளர்களாக ஆரம்பத்தில் M. முத்துசாமி, றொக்சாமி, லத்தீப், T.V. பிச்சையப்பா கண்ணன் - நேசம் ஆகியோர் இசையமைத்த பாடல்களே ஒலிபரப்பப்பட்டன. ஆரம்பத்தில் பாடல்கள் வெளி வந்தபோது பல விமர்சனங்கள் வந்தன. இன்று இருக்கும் கேள்வியைத்தான் அன்றும் கேட்டார்கள். இந்தியாவின் பாடல்களோடு நெருங்குமா? இசைகள் ஏதோ தகரத்தில் அடிப்பதாக ஏளனம் பண்ணினார்கள். யார் கேள்விகளைக் கேட்டாலும் மெல்லிசையை ரசிப்பதற்கென்று ஒரு சிறு கூட்டம் இருந்ததை மறுப்பதற்கில்லை. நம்நாட்டு பாடல்கள் ஒலிபரப்பும் போது நான் வானொலிக்கு கிட்டச் சென்று விடுவேன். எனது வீட்டிலே “மெல்லிசைப்பாடல்” நடக்குதென்று சொல் வார்கள். இந்தப் பாடல்களை நான் திருமண மாகி பிள்ளைகள் பிறந்த பின்பும் ஆர்வமாக ரசித்திருக்கின்றேன். இந்த மெல்லிசைப் பாடல்கள் பற்றி எனக்கு பேசிக் கொள்வதற்கு ஒரு ரசிகன் இருந்தார். அவர் பராவின் நல்ல நண்பனாவார். அவர் சட்டத்தரணி செ. பேரின்ப நாயகம். அவர் நல்ல இசை ரசிகன். அவரும் சில பாடல்கள் ஒலிப்பதிவு செய்து வைத்திருந்தார். அதனால் இருவரும் பேசி மகிழ்வோம். அவரிடம் இன்றும் ஒலி நாடாக்கள் இருக்கின்றன.நம்நாட்டு கவிஞர்கள் பலரது பாடல்கள் இசையமைத்து பாடப்பட்டன. ஈழத்து ரத்தினம், சில்லையூர் செல்வராஜன், பா. சத்தியசீலன், அல்வைச்சுந்தரன், அங்கையன் கைலாசநாதன், பளீல்காரியப்பர் ஆகியோரே நினைவில் வருகின்றனர். நம் நாட்டு சினிமாப் பாடல்களும் மெல்லிசைப்பாடல்களுக்குள் அடக்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பப்பட்டு வந்தன. அதனால் தென்னிந்தியப் பாடல்களுடன் நமது பாடல்கள் இணையாகுமா என்று கேட்டதில் வியப்பில்லைத் தான்! பாடல்களை பதிவு செய்வதிலே ஆரம்பித்த நமது கலைஞர்களுக்கு நல்ல பக்கவாத்தியங்கள் இருக்கவில்லை. பழைய வாத்தியக்கருவிகளுடன், சிங்கள தமிழ் கலைஞர்களுடன் செய்ய வேண்டிய சூழ்நிலை. கலையகத்துள் குறிப்பிட்ட நேரத்துள் ஒத்திகை, ஒலிப்பதிவு செய்யவேண்டுமென்று தகவல் களை வானொலி நிகழ்ச்சிகளுக்கு நானும் சென்று வந்தபின்பே நமது கலைஞர்களுக்கு இருந்த தடைகளை அறியமுடிந்தது.ஆரம்பத்தில் கோகிலா, சுபத்திரா, அம்பிகா தாமோதரம், முல்லைச்சகோதரிகள், பார்வதி சிவபாதம் என்று இன்னும் பலரும்; பரா, குலசீல நாதன், அருமைநாயகம், சந்திரசேகரன், முத்தழகு, கணபதிப்பிள்ளை, சத்தியமூர்த்தி என்று இன்னும் பலரும் பாடக்கேட்டுள்ளேன். பாடல்கள் மனதுக்கு மகிழ்வைத்தந்தன. பராவின் பாடல்களான கங்கையாளே, சந்தன மேடையின் நிலவினிலே, அழகான ஒரு சோடிக்கண்கள், குல சீல நாதனின் ஞாயிறென வந்தாள், ஈழத்திரு நாடே என்று பாடல்கள் வரும். என். சண்முகலிங்கனின் பல பாடல்களை பராவும், குலசீலநாதனும் பாடியுள்ளார்கள். இதேவேளை சில்லையூரானின் பாடல்களும் பராவையும் குலசீலநாதனையும் உச்சத்துக்கு கொண்டு சென்றன. பளீல் காரியப்பரின் “அழகான ஒரு சோடிக்கண்கள்” என்ற பாடலும் ஒரு முத்திரை பதித்த பாடலாகும். சில்லை யூரானின் கவித்திறனுக்கு “ஞாயிறென வந்தாள்” என்ற பாடல் பெரும் புகழ்சேர்க்கிறது. கிழமைகளையும், மாதங்களையும் வைத்து மிக அழகாக வடித்த பாடலாகும். அக்கவிதையின் உயிர்த்துடிப்பு சில்லையூரின் வாயால் வரும்போது இன்னும் மெருகுபெறுகிறது. (சில்லையூரின் கவிதைச் சிமிழ்) முத்தழகு பல பாடல்கள் பாடினாலும் “எண்ணங்களாலே என்ற பாடலே நினைவில் வருகிறது. அப்பாடல் “அனுராகம்” என்ற படப்பாடலாகும்.கோகிலா சுபத்திரா சகோதரிகளும் மனதுக்கினிய பாடல்களைப் பாடியவர்களாவர். ‘கங்கையாளே’ என்ற பாடலிலும் இவர்களின் பங்களிப்பு இருந்ததாக எண்ணுகிறேன். அம்பிகா தாமோதரம் அவர்கள் இசைப்பேரரசு சண்முகரத்தினத்தின் இசையமைப்பில் பல பாடல்களை மெல்லிசை என்று வரும் முன் பாடியுள்ளார். இனிமையான குரல்; அடக்கமான ஏற்ற இறக்கங்களுடன் அவரது பாடல்கள் அமைந்திருக்கும். “மாணிக்கத் தேரிலே மயில் வந்தது மயிலாசனத்திலே மயில் வந்தது” என்ற பாடலையும் அவர் பாடியிருந்தார். இதன் பின் இப்பாடலை வேறொரு மெட்டமைப்பில் பாடகர் அமுதன் அண்ணாமலை பாடிப் புகழ் கொண்டார். வேல்விழா நிகழ்வுகள், திருவிழாக்களிலும் இப்பாடலையும் அண்ணாமலை பாடுவார். இவரது இப்பாடலுக்கு பெருமதிப்பு இருந்து வந்தது. முள்ளியவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட முல்லைச் சகோதரிகளின் குரலும் இனிமையானது. இவர்களது பாடல்கள் அனேகமாக அல்வைச்சுந்தரனின் கவிதை வரிகளையே பாடிக் கொண்டிருந்தது. தைதை யெனதைமகளும் வந்தாள், பாடு நண்பா பரிசுதரும்பூமி என்ற பாடல்களும், இன்றோர் புதிய தினம் எங்கும் புதுமை மணம் ஆகிய பாடல்களும் ஞாபகத்தில் வருகின்றன. மெல்லிசைப்பாடல்கள் பற்றிக் குறிப்பிடுகையில் அல்வைச் சுந்தரன் பற்றிய தகவலையும் கூறவேண்டும். அல்வாயைப் பிறப்பிடமாகக் கொண்ட த. சுந்தரலிங்கம், நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தின் உயர்தர வகுப்புச் சித்தியடைந்தவர். பண்டிதர் வீரகத்தியிடம் தமிழ் இலக்கணம் கற்றமையால் மரபுக் கவிதைகள் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். இவரைப் போன்றே கருணை யோகன் என்ற கலாநிதி செ. யோகராஜாவும் நல்ல கவிதைகளைப் படைத்தவர். வடமராட்சி யில் அல்வைச்சுந்தரன், கொற்றை பி. கிருஷ்ணானந்தன், நெல்லை நடேஷ், கோவி நேசன் ஆகியோரும் நானும் பல கவியரங்குகளில் பங்கேற்றுள்ளோம். அல்வைச் சுந்தரன் ஆசிரிய ராகி எட்டியாந் தோட்டையில் சேவையாற்றுகிறார். இன்று கவிதையை மறந்து ஒரு புகைப்படக் கலைஞராகவே பிரபல்யம் பெற்றுள்ளார்.மெல்லிசைப் பாடகர்கள், கவிஞர்கள், இசையமைப்பாளர்கள் என்று பலர் நம் நாட்டுப் பாடல்களுக்குள் பங்களிப்பு செய்துள்ளனர். அதற்காக எல்லோரையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் முடியவில்லை. தங்களைக் கூறவில்லை என்று யாரும் எண்ணவும் தேவையில்லை. ஏனெனில் பாடல்கள் வரும் போது வானொலி, தொலைக்காட்சியில் அவர்களது பெயரும் வந்து கொண்டு தானிருக்கும். அதற்காக யாரும் கவலைப்படத் தேவையில்லை. மெல்லிசைப் பாடல்களுள் “அழகுநிலாவானத்திலே பவனி வரும் வேளையிலே” என்ற பாடலும் இனிய சுகத்தை தரும் பாடலாகும். இப்பாடலைப் படியவர் மு. செ. விவேகானந்தன் என்பவராவார். முத்து சாமியின் இசையில் மண்டூர் அசோகா எழுதிய பாடலென எண்ணுகிறேன். இப்பாடலும் மிகவும் பிரபல்யம் பெற்ற பாடலாகும். இந்த மெல்லிசை வட்டத்துக்குள் பலபெண்பாடகி களும் உள்ளே நுழைந்தனர். சக்திதேவி குருநாதபிள்ளை, அருந்ததி ஸ்ரீரங்கநாதன், புஸ்பாராஜசூரியர், ஜெகதேவி விக்னேஸ்வரன், வனஜா ஸ்ரீனிவாசன், ஜனதாசின்னப்பு, திவ்யமலர் ஆகியோரையும் குறிப்பிடலாம். அருந்ததியின் பாடல்கள் நன்றாகத்தானிருக்கின்றன. என்றா லும் இவரது குரலும் சகோதரியான அம்பிகாவின் குரலும் சிலவேளை ஒரே மாதிரியிருப்பதை அவதானிக்கலாம்.சில்லையூரானின் “சிக்கனமே சிறந்த செல்வமடி” என்ற பாடலை யார் பாடினார்கள் என்ற கேள்வி என்னுள் எழுகிறது. அருந்ததி யின் புதல்வன் சாரங்கன் ஸ்ரீரங்கநாதனும் பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். கண்ணன் - நேசம் என்ற இசையமைப்பாளர்கள் இலங்கையின் தமிழ் சினிமாவுக்கும் பங்களிப்பு செய்துள்ளனர். கண்ணன் இன்றும் யாழ்ப் பாணத்தில் பல பாடல்களுக்கு இசையமைத்து இசைத் தட்டுக்களாக வெளிக்கொணர்ந் துள்ளார். கண்ணன் - நேசம் இசையமைப்பில் ‘புதுறோஜா மலரே’ என்ற பாடலை ஹ.ஹ. பாக்கிய ராஜா தொலைக்காட்சியில் பாடியிருந்தார். அது வானொலியிலும் ஒலிபரப்பாகி இருந்தது. இப்பாடலை ஷெல்லிதாசன் எழுதியிருந்தார். ஷெல்லிதாசன் பல புதுக்கவிதைகளை எழுதி யவர். இப்போ எழுதாமல் ஓய்ந்துவிட்டார். புதுறோஜா மலரே என்ற பாடலையும் மௌளகுரு எழுதிய சின்னச் சின்ன குருவிகள் என்ற பாடலையும் எனது மூத்த மகனுக்கு பாடிக் காட்டுவேன். அவரும் பாடிப் பாடி சிறுவயதில் தூங்கிக் கொள்வார். இப்பாடல்களை எனது மகன் வளர்ந்த பின்பும் பாடிக்காட்டுவான். கால நிகழ்வுகளால் மௌனகுரு எழுதிய அந்தப் பாடல் ஒலிபரப்ப தடையாகி விட்டது.“நாளை இந்த ஈழ நாட்டை நடத்தப்போகும் குருவிகள்” என்பது தான் அந்தவரிகள். இந்த வரியை புரியாததினால் இப்பாட்டை நிறுத்தி விட்டார்கள். அமுதன் அண்ணாமலையின் மண்குடிசை என்வீடு மாளிகைதான் என்மனசு என்ற பாடலும் முத்தமிழ் முருகனுக்கு மூன்று தலம் என்ற பாடலும் அண்ணாமலையின் பாடல்களுள் பெயர் பெற்றவை. கதிர் சுந்தரலிங்கம், அன்சார் ஆகியோரது பாடல்களும் நினைவில் வருகின்றன.“அழகான பாட்டொன்று பாடாய்” என்ற பாடல் ‘அரங்கேற்றம்’ நிகழ்ச்சியில் பாடிய N. கிருஷ்ணனின் முதலாவது மெல்லிசைப் பாடலாகவும் இடம்பெற்றது. இவர் அதிகம் பாடலைப்பாடவில்லையென்றாலும் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் பாராட்டுப் பெற்ற வையாக அமைந்தன. இவர் கலாவதியுடன் பாடிய சொல்லத்தான் நானும் எண்ணித்தான் நாளும் என்ற பாடல் மறக்க முடியாத பாடலாகும். இப்பாடலுக்கு திருமலை பத்மநாதன் இசையமைக்க K.K. மதிவதனன் பாடலை யாத்துள்ளார். கலாவதி ஈழத்து மெல்லிசைத் துறையில் மட்டுமல்ல; சிங்களப் பாடல்களையும் பாடியுள்ளார். அதே போன்று முத்தழகுவும் சிங்களத்தில் பல பாடல்களை பாடியுள்ளார்.முத்துசாமிமாஸ்ரரின் இசையில் பாட ஆரம்பித்த N. ரகுநாதன் அவர்கள் முத்துசாமி யின் மகன் மோகன்ராஜ் அவர்களின் இசையிலும் பாடியுள்ளார். பூச்சூடும் நேரம் வந்தாச்சு, நினைப்பது எல்லாம் நடக்குது என்ற நினை வினில் மயங்காதே என்ற பாடலும், மாத்தளை முத்துமாரியம்மன் பற்றிய பாடல்களை M.S. செல்வராஜாவின் இசையிலும் பாடி தனக்கென ஒரு இடத்தை பதித்துக் கொண்டார். வானொலி யில் இசைக்கச்சேரி செய்யும் கலைஞரான இவரது மெல்லிசைப் பாடல்கள் தனித்து வமானது தான். அடுத்து சத்தியமூர்த்தி என்ற பாடகன் ஒரு சங்கீதக் கலைஞனோவென எண்ணத் தோன்றுகிறது. அவர் பாடிய “ஓ வண்டிக்காரர்” என்ற பாடல் நீலாவணனை நினைவுபடுத்திக் கொள்கிறது. சங்கீத ஞானம் கொண்ட கலைஞனாக சத்தியமூர்த்தியை பதிவுசெய்கிறது.மெல்லிசைப்பாடல்களுக்கு முன்பு பொப்பி சைப்பாடல்கள் வானொலியிலும், அரங்கு களிலும் வேகமாக வந்து கொண்டிருந்த வேளை பொப்பிசைக் கலைஞர்கள் பைலா ஆட்டப் பாடல்களை பாடிக் கொண்டிருந்தார்கள். மெல்லிசைப் பாடல்கள் புகுந்தவேளை வானொலியில் கடமையாற்றிய S. ராமச்சந்திரன், A.E. மனோகரன் ஆகியோரும் பல பாடல்களை பாடியிருந்தனர்.சங்கீதபூஷணம் M. A. குலசீல நாதன் அவர் களே முதலில் மெல்லிசைப் பாடல்களை பாடியிருந்தார். இதன் பின் சங்கீத பூஷணங் களான L. திலகநாயகம்போல், S. பத்மலிங்கம் ஆகியோரும் மெல்லிசைப் பாடல்களை பாடியிருந்தனர். திலகநாயகம் போல் பாடிய நித்திரையில் தூங்கும் நித்திலமே வாராய் என்ற பாடல் இன்றும் காதில் வந்து ஒலிக்கிறது. ளு. பத்மலிங்கத்தின் “பாட்டுக்கு நீயொருகம்பன் என்ற பாடலும். ராமமூர்த்தியின் இசையிலமைந்த “உச்சி வெயில் காட்டினுள்ளே” என்ற பாடலும் பிரசித்தி பெற்றவை.ஒரு காலகட்டத்தில் மெல்லிசைப்பாடல் களைப் இந்தியக் கலைஞர்களான ஜொலி ஏபிரகாம், T.M.S.. இன் புதல்வர் செல்வகுமாரும் பாடியிருந்தனர். அப்போது ஈழத்தின் மெல்லி சையா? இந்தியாவின் மெல்லிசையா எனக் கேட்டனர். ராமமூர்த்தி இசையமைக்கலாமென் றால் இந்தியக் கலைஞர்கள் பாடக் கூடாதா? என்ற கேள்வி மட்டும் எழவில்லை. ஏனெனில் இவர்கள் இலங்கை வந்தபோது தற்செயலாக பங்குபற்றிய நிகழ்வாகும். ஆனால் ஈழத்துப் பாடல் என்ற பெயர் அழிந்து மெல்லிசைப்பாட லென்ற பெயர் நிரந்தரமானது. திருமதி பார்வதி சிவபாதம் என்ற பாடகி ஆரம்பகாலத்தில் பல பாடல்களை பாடியவர். இவர் பாடிய “மல்லிகை பூத்த பந்தலில்” என்ற பாடல் இன்றும் நினைவில் நிற்கிறது.மெல்லிசைப் பாடகர்களுக்கான தேர்வு காலத்திற்கு காலம் நடைபெற்று வந்தது. இதில் பல கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழில் பாடவல்ல சுஜாதா அத்த நாயக்கா சந்திரிகா டீ அல்விஸ் (பின்னாளில் ஸ்ரீவர்த்தனா) ஆகியோரும் பாடலைப் பாடினார்கள். சந்திரிகா பாடிய “ஆடி வரும் தென்றலே பாட்டுப்பாடவா!” என்ற பாடல் மனதில் பதிந்திருந்தது. இப்பாடல் சிங்களப் பாடலாகவும் மொழிமாற்றம் செய்யப் பட்டிருந்தது. சில சிங்கள இசையமைப் பாளர்களும் மெல்லிசைப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர் என்பதையும் குறிப்பிட் டாகவேண்டும். அனேக மாக ரூபவாஹினியில் தான் இது நடந்தது.1977 இன வன்செயலின் பின்பு சுதந்திரன் பத்திரிகையில் ஒரு கேலிச்சித்திரம் வந்திருந்தது. தங்கரதம் போலே பொங்கி வரும் மலரே; எந்தன் ஈழநாட்டை பார்த்தாயா? சிங்களமும் தமிழும் சேர்ந்து நடம்புரியும் மங்காத காட்சியில் பூத்தாயா? என்ற மெல்லிசைப் பாடலை எழுதி தமிழர்களை சிங்களவர்கள் பஸ்வண்டியில் இறக்கி கொலை புரிவது போன்ற கேலிச் சித்திரம். இந்தப்பாடல் முன்பு வானொலியில் ஒலிபரப்பப்பட்டு வந்தது. மெல்லிசைப் பாடலும் கேலிச்சித்திரத்திற்கு பயன்பட்டது என்பது பலருக்கு தெரியாத விடயம். மெல்லிசைப்பாடல்களுக்கு ரூபவாஹினியும் தனது பங்களிப்பை வழங்கி யிருந்தது. ஜெகதீசன், நிலாமதி, ஸ்ரீதர் பிச்சையப்பா, மகிந்தகுமார், கணேஸ்வரன், ராணியோசெப் என்று ஒரு கூட்டமே இருந்தது. இங்கும் அருணா செல்லத்துரை அவர்கள் தனது பங்களிப்பை வழங்கியிருந்தார். ‘உதயகீதம்’ என்ற நிகழ்ச்சியை தயாரித்து வளர்ந்து வரும் பாடகர்களை பாட வைத்தார். திவ்யராஜன், ஜெயபாரதிதாசன், விஜயரத்தினம், யாதவன், மொறின் ஜெனற் போன்றவர்கள் இதனூடாக பாடவந்தவர்களென எண்ணு கிறேன். ளு. மகேந்திரன் என்பவர் இசையமைத்து நிகழ்வை ஒருங்கிணைத்தார்.பல பாடகர்களின் பெயர்களை குறிப்பிட்ட நான் ஜோசப் ராஜேந்திரனை மறந்திருந்தால் அது பெருந்தவறாகும். ஏனென்றால் இவரும் ஒரு ஆரம்பகால பாடகன், பரா, குலசீலநாதன், ஜோசப், ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய மானவர்கள். ஜோசப் ராஜேந்திரனின் பாடல்கள் மிகவும் இனிமையானவை. இவர் நவாலியூர் செல்வத்துரையின் ‘காத்திருப்பேன் உனக்காக’ என்ற படத்திலும் பின்னணி பாடியுள்ளார். அடுத்து பொன் சுபாஷ் சந்திரன் பாடிய திருமலையில் ஒரு நாள் திருமணம் நடந்ததுவாம். என்ற பாடலும் இன்னும் சில பாடல்களும் ஞாபகத்தில் வருகின்றன. மகிந்தகுமார் ஒரு சிறந்த பாடகர். அவர் பாடிய “கற்பனை செய்வதால் கோடி சுகம்” என்ற பாடலை மிகவும் விரும்பிக் கேட்பேன். காரணம் இந்தப்பாடலை எழுதியவரும் சில்லை யூரான்தான்! அவரது கவிதைகள், பாடல்களை ரசிப்பதிலே அலாதிப்பிரியம் கொண்டவன் நான். சில்லையூரானிடம் இருந்த சிறப்புகள் எல்லோருக்கும் கிடைக்காது. அது அவருக்கு ஒரு கொடை. மகிந்தகுமார் பாடிய அந்தப்பாடல் சில்லையூரான் இறப்பதற்கு மூன்று வருடங் களுக்கு முன்பு எழுதியதாக இருக்கலாம். பல கவிஞர்கள் மெல்லிசை மூலம் பாடலாசிரியர் களாக வந்தனர். மூத்த கவிஞர்களுக்கு பின்பு வந்தவர்களில் V. ஜெகதீசனின் பாடல்வரிகள் சிறந்தவை. வலுமென்மையாக காதலையும் இயற்கையையும் வைத்து கச்சிதமாக எழுதும் திறன் கொண்டவர். மரபு, ஓசையோடு பாட லெழுதிய கவிஞர்களுக்கெல்லாம் என்னாலும் பாடலெழுத முடியுமென ஒரு புதுக்கவிஞரும் புறப்பட்டார். புதுமைக்கவியென்றும் இவரைக் குறிப்பிடலாம். அவர்தான் மேமன் கவியாகும். இவரது பாடல்கள் வானொலி தொலைக்காட்சி களில் பார்த்தும் கேட்டுமுள்ளேன். இவருடைய கவிதைகள் சில புரியாவிட்டாலும் மெல்லிசைப் பாடல் கவிவரிகள் ரசிக்கும் படியாக இருக்கிறது. அந்த வகையில் ‘கவிபாய்’ கலக்கி விட்டாரென்றே கூறவேண்டும்.ச. ஷஜகான் (சிவகுமார்) பற்றி செய்திகள் வந்துகொண்டிருந்தன. அவருடைய பாடல் அல்பம் வெளிவந்ததாக அறிந்தேன். வானொலி தொலைக்காட்சி யென்றுவிட்டு வைக்காதவர். நல்ல குரல் வளம் மிக்கவர். பாரதியார் வேடமிட்டு ஒரு மெல்லிசைப் பாடலைப் பாட பார்த்துள்ளேன். அவரது மென்மையான குரலிலே எனக்கு கூடிய அன்பு! அப்சராஸ் இசையிலும் பாடியவர். கவிஞர் ‘கனிவுமதி’ இசை அல்பம் வெளியீட்டு விழாவில் மெல்லிசை பற்றி ஏதோ பேசியிருந்தார். முதல் பாடல்களை ரசித்துக் கேட்க வேண்டும். M. மோகன்ராஜ் அக்னி சிவகுமார், நிலுஷ்ஷி ஆகியோரும் மிகவும் சிறந்த மெல்லிசைப் பாடல் களைப் பாடியுள்ளனர். சில பாடல்களை சிவகுமார் இசையமைத் துள்ளார். எத்தனையோ நல்ல பாடகர்கள் இருக்கிறார்கள். நீதிராஜசர்மா, கலைக்கமல், ஆகிய கலைஞர்களும் மறக்க முடியாதவர்கள். கவிஞர் H.M. ஷம்ஸ் நல்லபாடகர், பாடலாசிரியர். இவரது “வெண்புறாவே” பாடல் காலத்தால் அழியாத கவிச்சித்திரமாய் விளங்குகிறது. இன்னும் இப்பாடலை நினைத்து கனவு காணுகின்றோம். விடிவு காணவேண்டும் என்ற ஆசை!சினிமாப்பாடல்கள் பாடினால் மெல்லிசை பாடமுடியுமென எண்ணியவர்கள் பலர். அப்படிப் பாடப்போய் சந்தர்ப்பம் கிடைக்காமல் போனவர் களும் உளர். இன்னும் சிலர் சங்கீதத்தை பாடமாகக்கற்று டிப்ளோமாபட்டம் பெற்று வானொலிக்கு கச்சேரி செய்யமுடியாதவர் களாகவும் இருந்தனர். இவர்களுக்கெல்லாம் மெல்லிசைப்பாடல் கைகொடுத்தது. தங்கள் குரலை மெல்லிசையூடாக வானொலியில் ஒலிபரப்பி வைத்தனர். மெல்லிசை என்பது இலகு சங்கீதம். இந்த மெல்லிசையை நம் தமிழரின் ஒரு இசை வடிவமாக பதிக்க வேண்டுமென்ற அவாவே இருந்தது. அதற்காகவே மெல்லிசை என்ற பெயரோடு மலர்ந்தது. ஆனால் சில இசையமைப் பாளர்களும் பாடலாசிரியர்களும் மெட்டுக்குப் பாட்டுபோட்டு பாட்டுவரிகளை நீட்டி வைத்தனர். இதனை இந்தியச் சினிமாப்பாடல்களின் வரம்பிற்கு கொண்டுவரமுயன்றனர். ஆனால் அது வெற்றியளிக்காமலே போய்விட்டது. பாடலாசிரியர்கள் இயற்கையைப் பாடுகின்றேன் என்று பொருத்தமற்றவரிகளை வலிய இழுத்துபோட்டு பாடல்களை கீழே விழுத்தியுமுள்ளனர்.மெல்லிசைத்துறைக்குள் காரை செ. சுந்தரம்பிள்ளை, செ. குணரத்தினம், அம்பி போன்ற மூத்த கவிஞர்களும், அன்பு முகைதீன், கார்மேகம் நந்தா, அக்கரைப்பாக்கியன், மண்டூர் அசோகா, இறைதாசன், ஏழில்வேந்தன் இன்னும் பலர் பாடல்களை எழுதியுள்ளனர். விபரமாக எழுதுவதெனில் எல்லாப் பாடல்களையும் கேட்டபின்பு ஒரு ஆய்வு செய்தால் மெல்லிசையின் வளர்ச்சி பற்றி அறிவதற்கு ஏதுவாக அமையும். இங்கு நினைவில் நின்ற பாடல்களையும், பாடகர்களையும், கவிஞர்களையுமே எழுதியுள் ளேன். இது பற்றிய சிறந்த ஆய்வு வந்தால் வரவேற்கக் கூடிய விடயமாகும். மெல்லிசைக்கு இலங்கை வானொலியும், ரூபவாஹினியும் கூடுதலான வாய்ப்பை வழங்க முன் வரவேண்டும். அப்போதுதான் நமக்கென்று ஒரு இசைவடிவம் நிறைவு காணும்.