Sunday, July 1, 2007

ஒரு பாடகனும் ஒரு நாடகனும்

கனடாவில் கோடை வந்துவிட்டால் கூடவே அடுக்கடுக்காக கொண்டாட்டங்கள், விழாக்கள் என்று வந்துவிடும். அதுவும் ஒரேநாளில் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் வந்துவிட்டால் சிரமந்தான். ஏதாவது ஒன்றைத் தியாகஞ்செய்து விடவேண்டியதுதான்.

கடந்த ஜுன் 3ந்திகதி, ஞாயிற்றுக்கிழமை இப்படி ஒரு சிரமம் என்னை எதிர்நோக்கியது. இசையரங்கம் நடாத்தும் இசைக்கு ஏது எல்லையில் ஜேர்மன் கண்ணன் பாடுகிறார். அங்கிருந்து பல மைல் தூரத்தில் டொரன்ரொ பல்கலைக்கழகத்தில் இலக்கியத் தோட்டத்தினரின் 2006ம் ஆண்டுக்கான இயல் வாழ்நாள் விருதை பிரபல நாடகர் ஏ. தாசிசியஸ் பெறுகிறார்.

30 வருடங்கள் பின் நோக்கிய என் இலங்கை வாழ்க்கைக் காலத்திலே இவர்கள் இருவரையும் இருவேறு தளங்களில் அரங்கு ஆற்றுக்கலைஞர்களாக பார்த்து ரசித்தவன். நேரடி அறிமுகமும் இருந்தது. எனவே இரண்டு நிகழ்ச்சிகளிலும் நேரத்தைப் பங்கிட்டு கலந்து கொள்ளத்தீர்மானித்தேன். கண்ணனின் பாடல்களில் குறைந்தது இரண்டையாவது கேட்டு விட்டு இலக்கியத்தோட்ட விருதுவிழாவிற்கு போவதென என் அன்பரும், "பார்த்தசாரதி" யுமான திலீப்குமாருடன் ஒப்பந்தம் செய்துகொண்டேன்.


கண்ணன் ஜேர்மனிக்கு புலம் பெயரமுன்னர் யாழ்ப்பாணத்தில் இசைக்குழுக்களில் ஒரு பாட்கனாக இருந்தகாலத்தில் கர்நாடக சாயல் கொண்ட திரை இசைப்பாடல்களை பாடுவதில் வல்லவராக இருந்ததினால் எனக்கு அவர்மேல் ஒரு தனி அபிமானம் இருந்தது. மேடை நிகழ்ச்சிகள் செய்த அந்தக்காலத்தில் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். அப்படி சந்திக்கும் வேளைகளில் என் "நேயர் விருப்பமாக" அவரிடம் "சங்கராபரணம்" படப்பாடலான "சங்கரா" என்ற எஸ்பிபி யின் பாடலைப் பாடச்சொல்லி, மறக்காமல் கேட்பேன். அவரும் அவ்வாறு பலதடவைகள் மேடையில் பாடியிருக்கிறார். காலப்போக்கில் அவர் ஜேர்மனிக்கு சென்று விட்டபின் தொடர்பு அறுந்துவிட்டபோதிலும், அவ்வப்போது நினத்துக்கொள்வேன்.

கண்ணன் பாடிய பாடல்களில் நான்கினை மட்டும் கேட்டுவிட்டு விருதுவிழா நோக்கிய என்பயணத்தைத் தொடர்ந்தேன். அவற்றுள் கவிஞர் செழியனின் "துப்பிவிட்டுப் போனது காற்று" என் மனதில் பதிந்து போய் ஒரு சுகானுபவத்தை தந்தது. மிகுதிப் பாடல்களையும் கேட்டிருந்தால் என் தேர்வுவரிசை வேறாகவும் இருந்திருக்கும். ஆனால் இந்தப்பாடல் எப்படியோ அதில் இருக்கும் என்பது மட்டும் உண்மை.


நாடகர் ஏ. தாசிசியஸ் அவர்களை முதன்முதலாக கொழும்பு லும்பினி தியேட்டரில் அரங்கேறிய மகாகவியின் "கோடை" நாடகத்தின் இயக்குனராக அறிந்து கொண்டேன். ஒரு கவிதை நாடகம் என்று சொல்லே ஏதோ அந்நியமானதாக நான் கருதிய அந்த வேளையில் "கோடை" நாடகத்தின் பேச்சோசை வசனங்களும், நடிகர்களின் இயல்பான இயங்குதன்மையும் எனக்கு வியப்பை அளித்தன. மேடை நாடகங்கள் பற்றிய வேறொரு படிமத்தை கொண்டிருந்த எனக்கு, முற்றுமுழுதாக இதை அங்கீகரிக்க மனம் இடம் கொடுக்காவிடினும், இவர்கள் ஏதோ புதிதாக செய்யத் தலைப்ப்ட்டிருக்கிறார்கள் என்று புரிந்தது.

கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கிய நாடகக்காரர்களிடையே தாசிசியஸின் இந்த முயற்சி எள்ளி நகையாடப்பட்டது எனக்குத் தெரியும். ஆனால் புது வரவுகளை ஏதோ வகையில் விரும்புகிறவன் ஆதலால் என்பாட்டில் "கோடை" பார்க்கப் போயிருந்தேன். அதில் பெரிய நாயனக்காரராக நடித்த திருமலையைச் சேர்ந்த சச்சிதானந்தன் (பின்னாளில் பிரசித்திபெற்ற ஒரு சட்டத்தரணி), பொலிஸ் சின்னப்புவாக நடித்தவர் ( மறைமுதல்வன் அல்லது சிங்காரவேல்), நாயனக்காரர் மனவி, கமலி, ஐயர் ஆகிய பாத்திரங்கள் என் ஞாபகத்தில் பதிந்தன. அவர்கள் நடிப்பில் இயல்புத் தன்மை தெரிந்தது.

"கோடை"யைத் தொடர்ந்து, பொறளை வை.எம்.பி.ஏ அரங்கில் தாசிசியஸின் இயக்கத்தில் மகாகவியின் "புதியதொரு வீடு" பார்க்கப் போயிருந்தேன். கடலில் காணாமல் போய் பின்னர் திரும்பிவரும் அண்ணனாக சச்சிதானந்தனும், அண்ணன் மனவியை சந்தர்ப்பவசத்தால் திருமணம் செய்துகொள்ளும் தம்பியாக விமல் சொக்கநாதனும் நடித்தார்கள். அக்காலச் சமூகச் சூழலில், இத்தகைய நிகழ்வை சொல்லப் புறப்படுவதே தவறானது, பண்புப் பிறழ்வானதென பொய்மையான முகமூடியைப்போட்டுக்கொண்டு இயங்கியவர்கள் மத்தியிலே இதைச்சொல்லப் புறப்பட்ட மகாகவியும், அரங்கிற்கு ஆக்கிய தாசிசியஸும் எனக்கு புரட்சிக்காரார்களாகத் தெரிந்தார்கள்.

நாடகத்தின் குழுப்பாடகர்களின் பின்னணிப்பாடல்களும், மேடையில் எளிமையான முறையில் கொண்டுவரப்பட்ட காட்சிகளும், நடிகர்களின் திட்டவட்டமான அசைவுகளும், தெளிவான வசன வெளிப்பாடும் அவர்கள் எத்தகைய பயிற்சிகளை பெற்றிருப்பார்கள் என்பதையும், நாடகர் தாசிசியஸின் கடும் உழைப்பு அதன் பின்னணியில் இருந்திருக்கிறது என்பதையும் எனக்கு உணர்த்தியது.
.
இதற்குப் பிறகு ஒரு நிகழ்வில் தாசிசியஸின் மன உறுதியை பார்க்கும் ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகையின் 10வது ஆண்டு விழா கொழும்பில் சரஸ்வதி மண்டபத்தில் நடந்தது. அதில் இடம்பெறவிருந்த நிகழ்ச்சிகளில் "கோடை" நாடகமும் ஒன்று. "கோடை" நாடகத்தில் கோயில் ஐயர், நாயனக்காரர் வீட்டில் தேனீர் அருந்துவதாக ஒரு காட்சி வரும். நாடகம் தொடங்குவதற்கு சற்று முன்னதாக விழா நிர்வாகிகள் அந்த காட்சியை நீக்கிவிடச்சொல்லி தாசிசியஸிடம் சொன்னார்கள். அவர் முடியாதென்று சொன்னதோடு, அதுவே நிபந்தனை என்றால் நாடகம் மேடையேற்ற முடியாது என்று கலைஞர்களை அழைத்துக்கொண்டு சென்று விட்டார். அங்கு இருந்த நான் உள்ளிட்ட பலர் இதை வியப்புடன் பார்த்துக் கொண்டு நின்றோம். பலவகையிலும் பத்திரிகைக்காரர்கள் முன்னிலைப் படுத்தப்பட்ட காலம் இது என்பதை நினைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் தாசிசியஸ் யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியில் ஆசிரியராகப் பணியேற்றதோடு அவரது நாடகத் தொழிற்பாடுகளும் வடக்கிற்கு இடம் பெயர்ந்ததும், அங்கு நிறுவப்பட்ட நாடக அரங்கக் கல்லூரியின் செயற்பாடுகளில் இவர் மும்முரமாக ஈடுபட்டதும், இவரோடு குழந்தை சண்முகலிங்கம், ஏ. ரி. பொன்னுத்துரை போன்றோர் இயங்கியதும் நான் அவ்வப்போது அறிந்த செய்திகள்.

ஆனால் புலம் பெயர்ந்தபின்னர், பிபிசியின் த்மிழ்ச்சேவையில் அவரது பணி பற்றிய விரிவான விளக்கங்கள், நாடகம் தொடர்பான தேடல்களில் அவர் இந்தியாவில் பல மாதங்கள் தங்கியிருந்தது, நாடகப்பட்டறைகளை அங்கும், பின்னர் புலம் பெயர்ந்த சிறுபான்மை இனங்களான குர்திஷ், சோமாலிய மக்கள் மத்தியிலும் நடத்தியது, சுவிஸ் நாட்டின் நாடக முயற்சிகளில் ஈடுபட்டதோடு அந்த நாட்டின் கலை சார்ந்த ஆலோசகராக செயற்பட்டது போன்ற விபரங்களை எல்லாம் இந்த் விருது வைபவத்தில் தாசிசியஸ் பற்றிய அறிமுகவுரை நிகழ்த்திய ஸ்ரீஸ்கந்தனின் உரையிலிருந்துதான் அறிந்து கொண்டேன்.

ஒரு சிறு மனத்தாங்கல். ஆரம்பத்தில் இந்த விருதுவிழா வெகு சாவதானமாகவே நடந்தது. தனித்தனி இலக்கிய விருதுகளைப் பெற்றவர்கள் தொடர்பான அறிமுகஉரைகளும் சற்று விஸ்தாரமாகவே அமைந்தன. சம்பிரதாயபூர்வமான நன்றி செலுத்தல்களுக்கும் குறைவிருக்கவில்லை. ஆனால் இவற்றின் பின்விளைவாக இயல்விருது பெற்ற நாடகர் ஏ. தாசிசியஸ் தான் வழங்கவிருந்த ஏற்புரையின் சீர் கெடுமளவிற்கு தன் குறிப்புகளிலிருந்து அவசரம் அவசரமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக தேர்ந்தெடுத்து வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டார்.

இருப்பினும் "புதியதோர் வீடு" நாடகத்திற்காக அவர் மன்னாரில் கடலோடிகளுடன் தங்கியிருந்து அவதானங்கள் செய்தது, சுபசிங்க என்ற சிங்கள வைத்தியர் போன்றோரிடம் தான் கற்றுக்கொண்ட சித்த மருத்துவம் சார்ந்த சித்திகள், அவற்றை தன்னோடு இயங்கியவர்களோடு பங்கிட்டுக்கொண்டது போன்ற விபரங்களை தொடர்பு அறுந்த இழைகளாகப் பெற்றுக்கொள்ளத்தான் செய்தோம். நாடகராக செயற்படும்போது தன் நாடகப்பிரதிகளில் மழித்தல், நீட்டலுக்கு இடம் கொடாத அவருக்கு இது நேர்ந்தது துர்ப்பாக்கியந்தான்.

நன்றி உரைகூற வந்தவர் மிகச்சாதாரணமான சில தமிழ்ப்பெயர்களுடனேயே அல்லாடிக்கொண்டிருக்கும்போது எனக்கு முன் வரிசையில் இருந்தவர் திரும்பிச் சொன்னார்.

" மேடையில் சொல்லப்படும் வசனங்கள் தெளிவாகச் சொல்லப்படவேண்டும் என்பதையே நியதியாகக் கொண்டு கடும்பயிற்சி கொடுக்கும் ஒரு நாடகக்காரரின் விருது விழாவில் இவ்வாறு முன்னர் வாசித்துப் பார்க்காமல்.."

மிகுதியை அவர் சொல்லவில்லை.