Friday, April 1, 2005

பப்லோ நெருடாவாக நான்..


ப்ல ஆண்டுகளுக்கு முன்னர் "மல்லிகை" போன்ற சஞ்சிகைகளில் பப்லோ நெருடா என்ற ஸ்பானியக் கவிஞரின் கவிதைகளின் மொழிபெயர்ப்புகளை வாசித்த ஞாபகம் இருக்கிறது.

திடீரென்று அந்த சிறந்த கவிஞர் எனக்கு மிகவும் பரிச்சயமானவராகப் போனார்.

கனடாவில் பல ஆண்டுகளாக வருடாந்தம் நாடக, நடன விழாவொன்றை "அரங்காடல்" என்ற பெயரில் "மனவெளி" அமைப்பு நடத்தி வருகின்றது. இந்த அமைப்பின் 12வது அரங்காடல் 2005 மார்ச் மாதத்தின் 13ந்திகதியன்று அரங்கேறியது.



இந்த அரங்காடலில் இடம் பெற்ற நான்கு நாடகங்களில் "வதை" என்ற நாடகத்தில், "பப்லோ நெருடா" வாக நான் நடிக்க நேர்ந்ததுதான் அந்த கவிஞரைப்பற்றிய என் தேடலுக்கு காரணமாக அமைந்தது.

வாழ்ந்து, மறைந்த ஒரு பிரபலமான கவிஞராக நான் நடிக்க முற்பட்டபொழுது அவரைப் பற்றி நிறையவே அறிய முற்பட்டேன். வலைத்தள்ங்களில் தேடித்தேடி அவரது வாழ்க்கை வரலாற்றை, அவரது கவிதைகளின் மொழிபெர்ப்புகளை, இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பொழுது அவர் ஆற்றிய உரை என்பனவற்றை வாசித்தேன்.

அவர் வாழ்ந்த சிலி நாட்டின் அக்கால அரசியல் நிலை பற்றி, ஆட்சியாளர்கள் பற்றி, ஆட்சி மாற்றம் நெருடாவிற்கு ஏற்படுத்திய பாதிப்பு, அவரது இலக்கிய நண்பர்கள் பற்றி அறிந்துகொள்ள முனைந்தேன். கடற்கரையோரமாக அமைந்திருந்த அவரது வீட்டின் அமைப்பு எவ்வாறு இருந்தது, அவருக்கு பிடித்தமான பொருட்கள் என்ன என்றெல்லாம் ஆய்வு செய்தேன். பாய்மரக் கப்பல்களின் நுனியில் இருக்கும் செதுக்கிய உருவங்களை சேகரிப்பதில் அவர் அக்கறை காட்டினார் என்பதை அறிந்துகொண்ட நான் அத்தகைய சிலவற்றை தேடி அலைந்தேன்.

ஒரு சிறிய நாடகத்தில் நடிப்பதற்கு இத்தனை முன்னேற்பாடா என்று நீங்கள் வியக்கலாம். ஆனால் அப்போது எனக்கு அவசியமானதாகத் தெரிந்தது. அத்தோடு மேடையேற்றத்தின்போது இந்த தேடல்களின் பலன் எனக்கு தெரிந்தது.



Mario Fratti என்ற அமெரிக்க நாடகாசிரியர், பப்லோநெருடாவின் இறுதி நாட்கள் பற்றி எழுதிய "வதை" (Torture) என்ற நாடகத்தை இந்திய எழுத்தாளரான புவியரசு என்பவர் தமிழாக்கம் செய்திருந்தார். அதைத் தழுவிய்தாகவே எங்கள் நாடகம் அமைந்திருந்தது. என்னுடைய பல மேடை நாடகங்களில் நடித்த துஷ்யந்தன் ஞானப்பிரகாசம் இந்த பிரதியை தான் இயக்கப் போவதாக கூறி என்னை நெருடாவாக நடிக்க அழைத்த பொழுது மிகுந்த சந்தோசத்துடன் சம்மதித்தேன்.

"வதை" நாடகத்தின் கதை இதுதான்.

1973ம் ஆண்டு செப்டெம்பர் 11ந் திகதி.
சிலி நாட்டில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சல்வடோர் அலெண்டேயின் சோஷலிச அரசாங்கம் அந்த நாட்டின் ராணுவத்தினால், அமெரிக்க உளவுச் சேவையின் உதவியுடன் கவிழ்க்கப்பட்ட நாள். அகஸ்டோ பினோஷே என்பவனின் கொடுங்கோலாட்சி ஆரம்பித்த நாள்.

இந்த ராணுவப்புரட்சியையும், தொடர்ந்த அதன் ஆட்சியையும் சிலி நாட்டவர் பலர் எதிர்க்கவே செய்தார்கள். அவர்கள் தேடி அழிக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவராக பப்லோ நெருடாவும் இருந்தார். பப்லோ நெருடா நவீன யுகத்தின் உன்னதமான ஸ்பானிய கவிஞராக கருதப்படவர். நோபல் பரிசு பெற்றவர். கவிழ்க்கப்பட்ட சால்வடோர் அலெண்டேயின் நெருங்கிய நண்பர். ஒரு சோஷலிச வாதி.

1973ம் ஆண்டு செப்டெம்பர் 11ந் திகதி - சிலி நாட்டின் ஜனநாயகம் கொன்றொழிக்கப்பட்ட நாள்.

1973ம் ஆண்டு செப்டெம்பர் 23ந் திகதி - புற்று நோயினால் ஏற்கெனவே பீடிக்கப்பட்டிருந்த பப்லோ நெருடா, நிகழ்ந்த சம்பவங்களினால் மனமுடைந்து மரணமான நாள்.

முக்கியமான இந்த இரண்டு நாட்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைத்தன் இந்த நாடகம் கூறியது.














இந்த நாடகத்தில் என்னுடன் இயக்குனர் துஷ்யந்தன் ராணுவ அதிகாரியாகவும், நீரா துஷ்யந்தன் மருத்துவராகவும், மயூரன் ராணுவ சிப்பாயாகவும் நடித்தார்கள். பப்லோவின் கவிதைகளோடு பாரதியின் கவிதையொன்றினையும் நாடகத்தில் ஆங்காங்கே உபயோகித்தோம். பாரதியின் கவிதை இதில் சேர்க்கப்பட்டிருக்கக்கூடாது என்று சில விமர்சகர்கள் கூறினாலும் எங்களுக்கு அதில் தவறு இருந்ததாகத் தெரியவில்லை.

தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்
மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ


நாடகத்தின் இறுதியில் ராணுவ அதிகாரியின் அட்டகாசத்தின் பின்னே இக்கவிதை ஒலித்தது என் கவிதா நாயகரான பாரதிக்கு நான் செய்த அஞ்சலியாகவே எனக்குப் பட்டது.



நாடகத்தில் என்னை (பப்லோ நெருடாவை)கடுஞ்சொற்களினால் துன்புறுத்திய ராணுவ அதிகாரி, என் நண்பனான் ஸ்பானிய கவிஞன் கார்சியா லோர்காவைபற்றி, இறந்துபோன சல்வடோர் அலெண்டே பற்றி இளக்காரமாக சொன்னபொழுது என் மனத்தின் வேதனையை பார்வையாளர்கள் உணர்ந்து கொண்டார்கள். என்னோடு அவர்களும் கலங்கிய போதுதான் நான் முன்னர் குறிபிட்ட தேடல்களின் பலன் எனக்குத் தெரிந்தது.

கனேடிய வானொலியான CBC எங்கள் நாடகம் பற்றிய ஒரு சிறுகுறிப்பை தனது " Big City, Small world" என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்புச் செய்தது. அதில் நான் கூறிய பப்லோ நெருடாவின் கவிதைகளின் தமிழ் வடிவமும் ஒலித்தது. கனடாவின் பிரதான வானொலியொன்றில் தமிழ் ஒலித்தது இதுவே முதற்தடவையாகவிருக்கும்.

நீங்களும் கேட்டுப்பாருங்கள்..

"Vathai" (Torture)...


இவையெல்லாம் சேர்ந்து இந்த நாடகத்தை என்னால் மறக்கமுடியாமல் செய்கின்றன.

No comments:

Post a Comment