Wednesday, January 5, 2005

கான இசைமணி சீர்காழி கோவிந்தராஜன்



70 களில் இது நடந்தது.
கொழும்பில் செட்டித்தெருவில் உள்ள சிவசுப்ரமணியசுவாமி கோவிலில் நடந்த கச்சேரி.

மாலை நேரம். கட்டுக்கடங்காத சனக்கூட்டம்.கோவில் வாசல்வரை செல்லும் தார்றோட்டில் எங்கள் கால்செருப்புக்களை கழ்ற்றி அதையே ஆசனமாக பயன்படுத்தி அமர்ந்திருந்த கூட்டத்தில் நானும் ஒருவன். இசைமணி சீர்காழி கோவிந்தராஜனின் இசையமுதை பருகுவதற்காக காத்திருந்தோம்.

கச்சேரி நடந்த இடம் முருகன் ஆலயம் என்பதாலோ என்னவோ அவர் முருகன் புகழ் பாடும் பாடல் ஒன்றுடன் ஆரம்பித்தார்.அந்தப்பாடலின் நான்காவது வரியை அவர் பாடிக்கொண்டிருக்கும் போது, திடீரென்று தெளிவாக இருந்த வானத்தில் எங்கிருந்தோ வந்த கருமுகில்கள் சூழ்ந்து கொண்டன. வந்த வேகத்திலேயே பெருத்த மழை பெய்யத் தொடங்கியது.

கூட்டத்தினரில் பலர் எழுந்து ஒடி அருகில் உள்ள கட்டிடங்களில் ஒதுங்கினர். என்னைப் போனற சிலர் இடத்தை விட்டுப் போனால் திரும்ப அந்த இடம் கிடைக்காது என்ற எண்ணத்தில், "நாங்கள் காணாத மழையா" என்ற பாவனையில், அசையாமல் இருந்து மழையில் தெப்பமாக நனைந்து கொண்டிருந்தோம்.

பாடிக்கொண்டிருந்த இசைமணி அந்த வரியுடனேயே பாட்டை நிறுத்தி விட்டார். மன்னிப்பு கேட்பது போல அவர் பிரார்த்தனை செய்தார்.

" விநாயகப்பெருமானே.. நான் உன்னைத் துதிக்கும் பாடலுடன் ஆரம்பித்திருக்கவேண்டும். ஆனால் உன் தம்பி புகழ் கூறும் பாடலுடன் தவறுதலாக தொடங்கி விட்டேன். என்னை மன்னித்துக்கொள் அப்பனே.."

என்று சொல்லியதோடு பாடலை மாற்றி பாடத்தொடங்கினார்.

" விநாயகனே ..வினை தீர்ப்பவனே.."

நாங்கள் நிமிர்ந்து ஆகாயத்தைப் பார்த்தோம். நாங்கள் அமர்ந்திருந்த றோட்டின் இரண்டு பக்கங்களிலும் இருந்த விளக்குக் கம்பங்களின் வெளிச்சத்தில், மழை கொஞ்சம் கொஞ்சமாக குறைவது தெரிந்தது. குறைந்து மெல்லிய தூறலாக வந்து சடுதியில் மழை நின்றே விட்டது.
கரகோஷம் எழுந்தது. அவர் கச்சேரியைத் தொடர்ந்தார்.

இரவு 12 மணி வரை அவர் இசைவெள்ளத்தைப் பருகினோம். கச்சேரி முடியும் வரைக்கும் ஒரு துளி கூட மழை பெய்யவில்லை.

எல்லாம் முடிந்து, எங்கள் இடங்களுக்கு போவதற்காக, புறக்கோட்டை பஸ் நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கும் போது மீண்டும் மழை பெருத்த இரைச்சலுடன்பெய்யத் தொடங்கியது. அடுத்த நாள் காலை வரை அது பெய்தது.

இன்றுவரை அந்த நிகழ்விற்கு என்னால் விடை கண்டுபிடிக்கமுடியவில்லை.

No comments:

Post a Comment